மும்பை: கூட்ட நெரிசல் காரணமாக புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் பேர் பலியான சம்பவம் மராட்டியத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய தலைநகர் மும்பையில் வார நாள்களில் புறநகர் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளைகளில் திருவிழா போல கூட்ட நெரிசல் அளவுக்கு அதிகமாக காணப்படும். இந்நிலையில், இன்று காலை தானே ரயில் நிலையத்தில் இருந்து மும்பை ரயில் நிலையத்திற்கு புறநகர் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகப்படியான கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் ரயில் படிக்கட்டுகளில் தொங்கியப்படியே சென்றனர்.
தானேவை அடுத்த மும்ப்ரா ரயில் நிலையத்தை கடந்து புறநகர் ரயில் சென்று கொண்டிருந்த போது, படியில் தொங்கிய 10க்கும் மேற்பட்ட பயணிகள் திடீரென தண்டவாளத்தில் விழுந்தனர். இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மும்பை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக மும்பை-தானே இடையேயான புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: "வேலியே பயிரை மேய்ந்த கதை..." அரசு விடுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவலாளி கைது! |
இதே போன்று சம்பவம் அடிக்கடி இந்த வழித்தடத்தில் நடைபெறுவதாகவும், ஆனால் ரயில்வே நிர்வாகம் கூடுதல் ரயில்களை இயக்க முன் வரவில்லை என்றும் அந்த வழித்தடத்தில் பயணிக்கும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், போதுமான ரயில்வே போலீசார் இந்த வழித்தடத்தில் இல்லை என்றும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பாக பேசிய ரயில்வே அதிகாரி, "காலை 9.30 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை. கூட்ட நெரிசல் மட்டுமே விபத்துக்கு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்ற கோணத்தில் ரயிலில் பயணித்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான அறிக்கை விரைவில் வெளியாகும்" என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்