தமிழ்நாடு

tamil nadu

இந்தூருக்கு இட்லி கடைக்கு வேலைக்கு சென்ற தேனி சிறுவர்கள் மாயம்.. ராஜதானி போலீசார் மீட்டது எப்படி?

By

Published : Jun 4, 2023, 1:23 PM IST

Etv Bharat

வடமாநிலத்திற்கு வேலைக்கு சென்று மாயமான தேனி மலைவாழ் சிறுவர்களை மீட்க ராஜதானி போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தேனி: ஆண்டிபட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கதிர்வேல்புரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியைச் 16 வயது சிறுவன், 15 வயதுடைய சிறுவன் மற்றும் 14 வயதுடைய சிறுவன் என 3 பேரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த இருவர் வேலைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதியில் உள்ள இட்லிக் கடைக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிறுவர்கள் நாள்தோறும் தொலைப் பேசி மூலம் பெற்றோரைத் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாகப் பெற்றோரைத் தொடர்பு கொண்டு பேசவில்லை எனத் தெரிகிறது. இதனால் பயந்துபோன சிறுவர்களின் பெற்றோர், வேலைக்காக அழைத்துச் சென்ற உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களைத் தொடர்பு கொண்டு விசாரிக்க முயற்சித்துள்ளனர்.

ஆனால் அவர்களையும் தொடர்புகொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது. இதனை அடுத்து வேறு வழியே இல்லாமல் ராஜதானி காவல் நிலையத்திற்குச் சென்று நடந்ததைக் கூறி புகார் அளித்துள்ளனர். புகாரைப் பரிசீலித்த அதிகாரிகள், குழந்தைகள் கடத்தப்பட்டார்களா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் ரகசியமாகக் குழந்தைகளைத் தேட திட்டமிட்ட காவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில், ராஜதானி ஆய்வாளர் சத்தியபிரபா, துணை ஆய்வாளர் முஜிபுர்ரஹ்மான், தலைமைக்காவலர் தங்கப்பாண்டி தலைமையில் தனிப்படை மத்தியப்பிரதேசம் விரைந்தது. தொடர்ந்து அங்குள்ள காவலர்களின் உதவியோடு குழந்தைகளை ரகசியமாகத் தேடி வந்த காவலர்கள், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்திலிருந்து 340 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் சிறுவர்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அங்குச் சென்ற காவலர்கள், அந்த குக்கிராமத்திலிருந்த சிறுவர்கள் மூவரையும் மீட்டு தமிழகம் அழைத்து வந்துள்ளனர். இதையடுத்து குழந்தைகளை ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவலர்கள் தொடர்ந்து பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். முன்னதாக சம்பவம் குறித்து சிறுவர்களிடம் காவலர்கள் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் தங்களுக்குப் படிப்பு அறிவு இல்லை என்றும், இட்லிக் கடை வேலைக்காகச் சென்று அங்கு வேலை பிடிக்காமல் தாங்களாகவே வெளியேறிச் சென்றதாகவும் கூறியுள்ளனர்.

தொடர்ந்து, அங்குள்ள ஆழ்துளை கிணறு தோண்டும் பணிக்காக லாரியுடன் வந்த தமிழ்நாடு தொழிலாளர்களுடன் சேர்ந்து இடம் பெயர்ந்து, இந்தூர் மாவட்டத்திற்குச் சென்றதாகவும் அங்கிருந்து அவர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது தங்களையும் போர்வெல் லாரியிலேயே அழைத்துச் சென்று தமிழ்நாட்டில் விட்டுவிடுவதாகவும் கூறியுள்ளதையடுத்து அங்கு இருந்ததாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கத்தில் காவலர்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கை அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:பயிற்சி கூடமான பூர்வீக வீடு.. மதுரையில் ஓர் 'மாணிக்கம்' - இப்படியும் ஓர் ஐஏஎஸ் அதிகாரியா..? - நெகிழ்ச்சி சம்பத்தின் சிறப்பு தொகுப்பு!

ABOUT THE AUTHOR

...view details