தமிழ்நாடு

tamil nadu

மதுரை அருகே கோயில் திருவிழாவில் இரு சமூகத்தினர் மோதல்: 12 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது!

By

Published : Jun 4, 2023, 1:46 PM IST

Etv Bharat

மதுரை ஒத்தக்கடை அருகே நடைபெற்ற கோயில் திருவிழா ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது இருவேறு சமூகத்தினரிடையே நடந்த மோதல் விவகாரத்தில் வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் 12 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயில் திருவிழாவில் இரு சமூகத்தாருக்கிடையே மோதல் - 12 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது

மதுரை: திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் மதுரை ஒத்தக்கடை அருகே உள்ளது. இந்த கோயில் திருவிழாவின் போது ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆடல்-பாடல் நிகழ்ச்சியை பார்க்க விடாமல் மறைத்தபடி ஒரு தரப்பினர் ஆடிக்கொண்டிருந்ததாகவும், இதனைப் பார்த்த மற்றொரு தரப்பினர் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கூறியதாகத் தெரிகிறது.

பின்னர், இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றி இருதரப்பு மோதலாக மாறிய நிலையில், அந்தப்பகுதியே போர்க்களமாக மாறியுள்ளது. மோதலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில், நொண்டிகோயில் தெரு பகுதிக்குள் புகுந்த சிலர் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக்குகள் மற்றும் ஓட்டு வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும், வீட்டிற்குள் இருந்த நபர்களையும் அடித்து காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று கலவரத்தை தடுத்து நிறுத்தினர். மேலும், இந்த இரு தரப்பு மோதலில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 36 பைக்குகள் 1 கார் ஆகியவை சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அதே பகுதியை சேர்ந்த மணிமுத்து, செந்தில்குமார், முத்துக்குமார், பழனிக்குமார் ஆகிய 4 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருதரப்பு மோதலால் திருமோகூர் பகுதியில் பதட்டமான சூழல் உருவானதை அடுத்து, அந்த பகுதி முழுவதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் பைக்குகள் கார் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒத்தக்கடை பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோயில் திருவிழாவில் நடைபெற்ற இரு தரப்பினருக்கு இடையேயான மோதல் மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒத்தக்கடை காவல்துறையினர் 12 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மதுரை அருகே திருமோகூரில் சாதி வெறியாட்டம். ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழாவின் போது, குடிபோதையில் சாதிவெறிப் பித்தர்கள் இவ்வாறு ஆதி திராவிடர்களின் குடியிருப்பிற்குள்ளே நுழைந்து கொலை வெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சொத்துக்கள் சூறை, ஏராளமானோர் காயம். மணிமுத்து, பழநிக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் சிலர் மதுரை அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சாதி ஆதிக்க வெறியாட்டத்தை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. சாதிய வன்கொடுமைகளில் ஈடுபட்ட அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக வேண்டுகோள் விடுக்கிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:வைகாசி விசாகம் நிறைவு.. கோயில் வளாகத்தில் மீன் சமைத்து விரதத்தை முடித்த பக்தர்கள்!

ABOUT THE AUTHOR

...view details