தமிழ்நாடு

tamil nadu

Odisha train accident: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு... 2 மாதங்களில் அறிக்கை?

By

Published : Jun 4, 2023, 3:04 PM IST

SC

ஒடிசா ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க பொது நல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

டெல்லி : ஒடிசா மூன்று ரயில்கள் விபத்தில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து இரண்டு மாதத்திற்குள் விசாரணை அறிக்க தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தில் தடம் புரண்டு கிடந்த ரயில் பெட்டிகளில் மோதி மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 270க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், எலக்ட்ரானிக் இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து எற்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.

விரைவில் விபத்துக்கான முழு காரணம் கண்டறியப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்து உள்ளது. விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள படுகாயம் அடைந்தவர்களை சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்ட பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடுமபத்தினருக்கு அரசு துணை நின்று வேண்டியவைகளை செய்து கொடுக்கும் என்றும் கூறினார். இந்நிலையில், ஒடிசா மூன்று ரயில்கள் விபத்து முறையான விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் தாக்கல் செய்த மனுவில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான குழு அமைத்து வழக்கு விசாரணை நடத்த வேண்டும் என்றும் இரண்டு மாத காலத்திற்குள் ஒடிசா ரயில் விபத்து குறித்து அந்த குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

மேலும் ஒடிசா ரயில் விபத்து போன்ற அவலங்கள் வருங்காலத்தில் நிகழாமல் இருக்க கவாச் கருவியை பயன்படுத்த வலியுறுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இந்திய ரயில்வே வரலாற்றிலேயே நிகழ்ந்த 4வது பெரிய ரயில் விபத்து என்று இந்த மூன்று ரயில்கள் விபத்து கருதப்படுகிறது. உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் குறித்த தகவல்களை மாநில அரசு மற்றும் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஜூன். 4) இரவுக்குள் தண்டவாளங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க :ஒடிஷா ரயில் விபத்துக்காண காரணம் இது தான் - ரயில்வே அமைச்சர் கூறிய தகவல்!

ABOUT THE AUTHOR

...view details